கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த தலைமைக் காவலர் (அடையாள எண் 1069) கே. வேலுமணி (50) என்பவர் நேற்று நள்ளிரவில் காவல் நிலைய பாராவில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
சுமார் 11 மணிக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து கார் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்து திரும்பவும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை கிருஷ்ணகிரியில் உள்ள TCR என்ற தனியார் மருத்துவமனைக்கு ஒரு மணிக்கு கொண்டு சென்றபோது அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறினர்.
தொடர்ந்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு விஜி (40) என்ற மனைவியும், மோகன் பிரசாந்த் (20), விஸ்வபிரகாஷ் (17) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதில், மோகன் பிரசாந்த் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயில்கிறார். விஸ்வபிரகாஷ் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.
நேற்று தருமபுரி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவ்வாறு காவல் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து மன அழுத்தம், மாரடைப்பால் இறந்துபோவதும் தற்கொலை செய்வதும் தமிழ்நாடு காவல் துறையில் தொடர்கதையாகி வருகிறது.
அடுத்தடுத்த நாள்களில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் இறந்தது தமிழ்நாடு காவல் துறையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.