கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ராமசந்திரன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் ராமசந்திரன் கூறுகையில், “கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு கொண்டுவந்துள்ள ஊரடங்கால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நலவாரியத்தில் இல்லாத ஆயிரக்கணக்கான உடல் உழைப்பு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே அரசு அவர்களுக்கு நிவரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து பணியில்லாமல் உள்ளவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்க வேண்டும். மாவட்டத்தில் பணப்பயிர்கள் எனப்படும் தோட்டப்பயிர்களான, பீட்ரூட், கேரட், பீன்ஸ் உள்ளிட்டவை அதிகமாக விளைவிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது ஊரடங்கால் அவற்றை எடுத்துச் செல்ல முடியாமல் தற்போது சுமார் 100 கோடி ரூபாயிலிருந்து 150 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இழப்பீடு வழங்கக்கோரி மனு கொடுக்கபட்டுள்ளது.