கிருஷ்ணகிரி: அனுமதி இன்றி கிரானைட் கற்களை வெட்டி கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 5 டன் எடை கொண்ட 7 கிரானைட் பிடிபட்டன. மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கணிம வளங்கள் உள்ளன. குறிப்பாக பல்வேறு வகையான அரியவகை கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இவ்வாறு வெட்டி எடுக்கப்படும் கற்களை கல் அரவை ஆலை மூலம் பாலிஸ் செய்யப்பட்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வணிகம் நடைபெற்று வருகிறது.
மேலும் கல்குவாரிகள் மூலம் வெட்டி எடுக்கப்படும் கற்களில் ஜல்லி எம் சாண்ட் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இவை அனுமதி பெற்றும் சில சமையம் அனுமதி இல்லாமலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் அரசுக்கு வருவாய் ஒருபுறம் கிடைத்து வந்தாலும் மறுபுறம் அனுமதி இன்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இவை இரவு நேரங்களில் ரகசியமாக கல் அறுக்கும் அரை அலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாலிஸ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனை திருநங்கையாக மாற்ற முயற்சி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றோர் புகார்!
இந்த நிலையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதமாக சிலர் அனுமதி இன்றி கற்களை வெட்டி கடத்துவதாக கனிமவள அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு உத்தனப்பள்ளி கெலமங்கலம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உத்தனப்பள்ளி அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பாக கற்களை ஏற்றிக்கொண்டு தேன்கனிகோட்டை பகுதியை நோக்கி அடுத்தடுத்து சென்று கொண்டிருந்த டாரஸ் லாரிகளை நிறுத்தி குழுவினர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அரசு அனுமதியின்றி கற்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்த நிலையில் லாரி ஓட்டுநர்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் 5 டாரஸ் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 5 டன் எடை கொண்ட 7 கற்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கற்களும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர். மேலும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு 7 லட்சம் எனவும் வாகனங்களின் மதிப்பு சுமார் 50 லட்ச ரூபாய் இருக்கும் எனவும் கனிமவள அதிகாரிகள் தெரிவித்தனர்.