ஓசூர் அருகே அக்கொண்டபள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றால் அக்கிரகாரம் கிராமத்தில் மட்டும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு அமைக்கப்பட்டு, பராமரித்து வந்த 35க்கும் மேலான பசுமைக் குடில்கள் கூரைகள் பெயர்ந்து அடித்துச் செல்லப்பட்டது. மேலும் அதே கிராமத்தில் தொடர்ச்சியாக 10 வீடுகளின் மேற்பகுதி கூரைகள் தாறுமாறாகப் பெயர்ந்து சேதமடைந்தன. இந்த இயற்கை பேரிடரில் அதிர்ஷ்டவசமாக வீடுகளில் குடியிருந்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
பலத்த சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் துண்டிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகளை சீர் செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்றுவருகிறது. அறுவடைக்கு தயாராகி இருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனதில் பல லட்ச ரூபாய் மேல் கடும் நட்டம் ஏற்பட்டிருப்பதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் போர்க் கால அடிப்படையில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க முன் வரவேண்டும் என விவசாய பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.