கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் என அனைவரும் வேலை இல்லாமல் குடும்பத்துடன் பாதிக்கப்பட்டுள்ளதாக நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்தில் சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக மாவட்டத்திலுள்ள அனைத்து நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்துவகை நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறுகையில்,
"கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் குறித்து ஈடிவி பாரத் சிறப்புச் செய்தியை வெளியிட்டது. இதையடுத்து, தற்போது தமிழ்நாடு அரசு நலிந்த நாடகக் கலைஞர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு முழு காரணமாக இருந்த ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்துக்கு நன்றி. அதேபோல் ஈடிவியின் செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை நாடக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் ஆகியோரின் குழுக்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக முன்னணி இசைக் கலைஞர் டி.எம் கிருஷ்ணா வழங்கியுள்ளார்.
மேலும், இதனால் கிடைக்கும் பலனை குழு உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்க நாடக கலைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்நிகழ்வு ஈடிவி பாரத் செய்தி வெளியிடப்பட்ட ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு அரசு, இசைக் கலைஞர்களுக்கு உதவ முன் வந்துள்ளதால் நாங்கள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளோம்", என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா