கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மலைகிராமங்களில் வாழும் சிலர் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளைக் கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக அனுமதியின்றி வைத்துள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு வனத்துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி 10 கள்ளத்துப்பாக்கிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இன்றும் (ஆகஸ்ட் 15) தேன்கனிக்கோட்டை அய்யூர், பெட்டமுகிலாலம், அஞ்செட்டி நாட்றாம்பாளையம், உரிகம், ஓசூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் வாழும் சிலர் தங்களிடமிருந்த 19 நாட்டுத் துப்பாக்கிகளை தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கையில், “மலைவாழ் மக்கள் தங்களிடம் இருக்கும் நாட்டு துப்பாக்கிகளை விரைவில் ஒப்படைக்கவேண்டும். இதுவரை நாட்டுத்துப்பாக்கி ஒப்படைத்தவர்களுக்கு பொது மன்னிப்பும், வாழ்வாதாரம் இழந்த நபருக்கு அரசாங்கத்தின் மூலம் உதவித்தொகை வழங்கப்படும். நாட்டுத் துப்பாக்கியை ஒப்படைக்காத நபர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும்” என்றார்.
கடந்த ஒரு மாதத்திற்குள் மலைவாழ் மக்களிடம் இருந்த 29 நாட்டுத் துப்பாக்கிகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளத்துப்பாக்கிகள் தயாரித்த பெண் உள்ளிட்ட மூன்று பேருக்கு போலீஸ் வலை!