கரூர்: கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி வரும் அலுவலக அமைப்பு பணியாளர்களை பழிவாங்கும் நோக்கில், பணியிடை மாற்றம் செய்து ஆணை பிறப்பித்ததாகக் கூறி, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை கண்டித்து, பல கட்ட போராட்டங்கள் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்றது.
தற்போது வரை இந்த சங்கத்தின் கோரிக்கையை ஏற்காத காரணத்தினால், ஜனவரி 11ஆம் தேதி மாலை காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜன.11) மாலை சுமார் 6 மணியளவில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
அதில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்.ஜெயராம், மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் கோபி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வராணி, கரூர் மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன் மற்றும் துணைத் தலைவர்கள் செல்வன், கண்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து நடைபெற்ற இக்காத்திருப்பு போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளர் செல்வராணி, மாவட்டச் செயலாளர் அன்பழகன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், தற்காலிகமாக காத்திருப்பு போராட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டு, இரவு 8 மணி அளவில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், இப்போராட்டம் குறித்து பேசிய தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன் ஜெயராம், "பள்ளிக்கல்வித்துறையில் தனக்கு வேண்டப்பட்ட சிலரை திருப்தி செய்வதற்காக திடீர் பணி மாறுதல்களை வழங்கி, ஊழியர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார்.
ஏற்கனவே இரண்டு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பிறப்பிக்கப்பட்ட ஆணையை திரும்பப் பெறுவதாக கூறிவிட்டு, மீண்டும் வேறொரு ஆணையை வெளியிட்டதால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளை ஏற்று, இன்றைய போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
மீண்டும் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, சுமூக தீர்வு ஏற்படாவிட்டால், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கை சுட்டிக்காட்டி, நடவடிக்கை கோரி மனு அளிக்கப்படும்" என தெரிவித்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு திடீரென நடந்த காத்திருப்பு போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி - 178 பேர் மீது வழக்குப்பதிவு!