கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன் தலைமையில் இரண்டாயிரத்து 500 உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அந்த மாநாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படும் மாநில நிர்வாகிகள் பதவிகளுக்குப் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள், இந்தச் சங்கத்தைப் போன்ற ஒரே பெயரில் வேறு சங்கம் ஒன்றை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
திடீர் போராட்டம்
சங்கத்திற்கு மாநிலத் தலைவராக தமிழ்செல்வி, பொதுச்செயலாளராக லட்சுமி நாராயணன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமையில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என நேற்று (டிசம்பர் 23) அறிவித்திருந்தனர்.
இதனைக் கேள்வியுற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், தனது தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோரைக் கூட்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
இதனையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ், தான்தோன்றிமலை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கியதால், மற்றொரு தரப்பினரும் எதிர் கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி, கரூர் வட்டாட்சியர் மோகன்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மீண்டும் இயல்புநிலை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Video: விவசாயியைத் தரக்குறைவாகப் பேசிய வங்கி மேலாளர்