கரூர்: காப்புக்காடுகளிலிருந்து ஒரு கி.மீ. தூரம் வரை குவாரிகள் அமைக்கலாம் என்ற அனுமதியை திரும்பப் பெற சுற்ற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கரூர் வெள்ளியணை பகுதியில் இன்று (ஜன.6) கே.பிச்சம்பட்டி கிராமத்தில் நமாஉமாதேவி கிரானைட் குவாரி (Nama Umadevi Granite Quarry) அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டமானது, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் இன்று (ஜன.6) நடந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரிய (Pollution Control Board TN) அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்துகள் வீடியோ மூலம் முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
புதிய கல்குவாரிக்கு எதிர்ப்பு: இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன்(Social Activist Mugilan), சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன், சூழலியியல் செயல்பாட்டாளர் வெறியம்பட்டி நாகராஜ், சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஜயன், லா பவுண்டேஷன் வாசுதேவன், உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல இயக்கங்களின் பொறுப்பாளர்கள் ஆட்சேபனை கருத்துகளைப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே பாதிப்புகள் ஏராளாம்; அரசு கவனம் தேவை: நிகழ்ச்சிக்குப் பின்னர் ஈடிவி பாரத் ஊடகத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அளித்த பேட்டியில், ’கரூர் வெள்ளியணை அருகே உள்ள கே.பிச்சம்பட்டி கிராமம் சுற்றிய கிராமங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வருவதால் ஏற்கனவே சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை ஆராய்ந்து, பாதிப்புகளை கண்டறிந்த பின்னர், புதிய கல்குவாரிகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும். புதிதாக அனுமதி கேட்கும் கல் குவாரிக்கு அருகே நீர் ஓடை செல்கிறது. இது தவிர, குவாரி செயல்படும் இடத்திற்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.
வெடி மருந்துகளினால் நில அதிர்வு அபாயம்: சுமார் 500 மீட்டர் தொலைவில் மக்கள் பயன்பாட்டுக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீர்நிலைதேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 மீட்டர் தொலைவில் வெடி மருந்து கிடங்கு செயல்பட்டு வருகிறது. குவாரிக்குள் ஏற்படும் வெடி சத்தத்தால் நில அதிர்வு ஏற்பட்டு வெடி மருந்து கிடங்கில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதி முழுவதும் அழியும் அபாயம் உள்ளது. மேலும், குவாரி அமைந்துள்ள 10 கி.மீ. தொலைவில் கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. குவாரி செயல்பட்டால் இதன் காரணமாக அரிய வகை உயிரினமாக உள்ள தேவாங்கு உயிரினம் அழியும் அபாயம் என உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?: மேலும், அதே பகுதியில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி குவாரி அனுமதி முடிந்தும், 5 மாதங்களாக அனுமதியின்றி எம்.பி.கிரானைட் என்ற குவாரி செயல்பட்டு வருகிறது. இதுகுறித்தும் அரசாணை 19-ன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் நேரில் ஆய்வு செய்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் குவாரி குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பொய் சான்றளிக்கும் விஏஓ: கல்குவாரிகள் இயங்குவதற்கு குடியிருப்புகள் இல்லை, குடிநீர் தொட்டிகள் இல்லை, நீர் நிலைகள் இல்லை என சான்றிதழ் வழங்கும் கிராம நிர்வாக அதிகாரிகள் மீது பொய் சான்றுகள் வழங்கியதற்காக நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்குத்தொடர இருக்கிறேன்’ என முகிலன் தெரிவித்தார்.
ஆற்றுமணல் கொள்ளை: மேலும், 'காப்புக்காடுகள் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு கல்குவாரிகள் அமையலாம்' என விதிமுறைகள் வகுத்திருப்பதன் பின்னணியில் அதற்கு மேல் உள்ள இடங்களில் 'ஆற்று மணல்கள் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளதாக நேரடியாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாட்டுவதாகக் கூறினார்.
மேலும், ‘காப்புக்காடுகள் என்றால் மலை சார்ந்த பகுதி என்று அர்த்தம் இல்லை. ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ள காடுகளை குறிக்கும் கரூர் மாவட்டத்தில் வாங்கல் முதல் பெட்டவாய்த்தலை வரை காப்புக்காடுகள் அமைந்துள்ளன. இதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் ஜேடர்பாளையம் முதல் ஒடுவந்தூர் வரை காப்புக்காடுகள் நிறைந்துள்ளன. திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை முதல் தென்கரை பகுதி முழுவதும் திருச்சி மாவட்டத்தில் காப்புக்காடுகள் நிறைந்துள்ளன.
காப்புக்காடுகள் அருகே குவாரிப்பணி;அரசு தடுக்கவேண்டும்: நேற்று கூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கல்லணையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிற்கு இருபுறமும் மணல் அள்ளுவதற்குத் தடை விதித்துள்ளது. எனவே, மணல் குவாரி அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள காப்புக் காடுகள் நெறிமுறையை பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.
இயற்கை வளங்கள் கொள்ளை போவதற்கு எதிராக நியூட்ரினோ (Neutrino Project In TN), ஸ்டெர்லைட் ஆலை (Sterlite plant issue) உள்ளிட்ட விவகாரங்களில் ஆதரவு தெரிவித்த திமுக, தற்பொழுது ஆட்சியில் உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மணல் குவாரிகள் அமையவும் துணை போகக்கூடாது, ஆறுகள் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள் இதுதான் - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!