கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜூலை 29) விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள் வேளாண்துறை அலுவலர்கள் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப்பேட்டியில், “கரூர் மாவட்டத்தில் 405 கோடி ரூபாய் செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புகழூர் கதவணையைப் பாதிக்கக் கூடிய வகையில் இருப்பதால், புகழூர் கதவணைக்கு கிழக்குபுறம் நாமக்கல் மாவட்ட நஞ்சை இடையாறு எல்லைப் பகுதியில் மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் புதிய மணல் குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம் சுற்றுச்சூழல் அனுமதியை கொடுத்து வருகிறது. இந்த நிலையில், நமது கரூர் மாவட்டத்தில் கடந்த 2021இல் இருந்து, 405 கோடி ரூபாய் மதிப்பில், புகலூர் வட்டத்தில் புகழூரில் கரூர் மாவட்டத்தையும் நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கதவணை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது, புகழூர் கதவணைக்கு அருகிலேயே, அதன் கிழக்கு புறப்பகுதியில் 2018-ல் கொடுக்கப்பட்ட திட்ட அறிக்கையின் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், நஞ்சை இடையாறு கிராமத்தில் புல எண்: 294(பி) என்பதில், 4.90 ஹெக்டேர் பரப்பளவில், 48,000 கனமீட்டர் ஆற்று மணல் காவிரி ஆற்றில் இயந்திரங்களை வைத்து எடுக்க சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
புகழூர் கதவணைக்கு அருகிலேயே புதிய மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்தால், கட்டப்படும் புதிய கதவணை பாதிக்கப்பட்டு உடையும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே, முக்கொம்பு அணைக்கு அருகில், கடந்த ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்து, அதன் விளைவாக 2018-ல் அணை உடைந்தது. அதேபோல நூற்றாண்டு கால பழமையான திருச்சி பாலம் அருகில் வரைமுறை ஆற்று மணல் அள்ளப்பட்டதால், 2018-ல் பாலம் உடைந்தது.
நஞ்சை இடையாறு மணல் குவாரி நாமக்கல் மாவட்டத்தில் இருந்தாலும், அது கரூர் மாவட்டத்தின் வாழ்வாதாரத்திற்காக வளர்ச்சிக்காக கட்டப்படும் புகழூர் கதவணையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால், காவிரி ஆற்றின் குறுக்கே நஞ்சை இடையில் மணல் குவாரி அமைப்பதற்கு, கரூர் மாவட்ட நிர்வாகம் அரசிடம் எதிர்ப்புத்தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இதேபோல, நெரூர் நன்னியூர் புதிய மணல் குவாரி அமைப்பதற்கு, காவிரி ஆற்றில் 113.760 கி.மீ முதல் 114.160 கி.மீ வரை, ஆற்றில் 400 மீட்டர் தூரம் மணல்மேடு உருவாகி நீரோட்டத்தை தடுத்து பாதித்து வருவதால், ஆற்றின் கரையில் இருந்து 100 மீட்டர் வடபுறப்பகுதியில் 3 மீட்டர் அளவு உயரமுள்ள மணலில், ஒரு மீட்டர் உயர மணலை எடுக்க அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டம் திருச்சி) விண்ணப்பம் வழங்கப்பட்டு, இணை இயக்குநர் (கனிமம்) உள்ளிட்டப்பல்வேறு துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து கொடுத்த அறிக்கை வழங்கியுள்ளனர்.
இதன்படி புதிய மணல் குவாரி நெரூர் நன்னியூர் பகுதியில் அமைப்பதற்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதி (EC) 06-06-2022 அன்று கொடுத்துள்ளது. இந்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி, புதிய மணல் குவாரி அமையும் இடம் இருக்கிறதா என்று சுற்றுச்சூழல் அக்கறை உள்ள பல்வேறு அமைப்பினர், வல்லுநர்களுடன் கடந்த ஜூலை 7ஆம் தேதி (09-07-2022) சனிக்கிழமை அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மையில், காவிரி ஆற்றில் 113.760 கி.மீ முதல் 114.160 கி.மீ வரை, ஆற்றில் 400 மீட்டர் தூரம் (ஆற்றின் கரையில் இருந்து 100 மீட்டர் வடபுறப் பகுதியில் ) எவ்வித மணல்மேடும் இல்லை. ஆற்றின் நீரோட்டம் தடுக்கப்படவும் இல்லை. உண்மையில், அந்த இடத்தில் ஆற்றில் மணலே இல்லாமல் தரைமட்டம் வரை உள்ளது என்பதுதான் யதார்த்த உண்மை.
போலியான ஆவணங்களைக்கொடுத்தும், பொய்யான ஆய்வறிக்கையும் கொடுத்து சட்டவிரோதமாக செயல்பட்ட கரூர் மாவட்ட உதவி இயக்குநர் (கனிமம்), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், கரூர் கோட்டாட்சியர்,மண்மங்கலம் வட்டாட்சியர், நன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பெரியம்மாபட்டி பகுதியில் அரசு நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படையில் கையகப்படுத்திய நரேந்திரன் என்பவரது நிலத்தை அப்பகுதியைச்சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சுமார் 140 ஏக்கர் சட்டவிரோதமாக விற்பனை செய்தது தொடர்பாக பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்மை மக்கள் இயக்கத்தின் நிர்வாகி பழ.ரகுபதி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு!