கரூர்: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இன்று மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதனிடையே தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் மனைவி நிர்மலாவுக்கு அவரது தாயார் லட்சுமி, தானசெட்டுல்மெண்ட் மூலம் வழங்கிய 2 ஏக்கர் 49.5 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மாளிகை கட்டுமானப் பணிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பொறியாளர்கள் உதவியுடன் அளவிடும் பணியினை இன்று (ஆகஸ்ட் 09) மதியம் 12 மணி அளவில் துவங்கினர்.
இதனை அடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் யாரும் இல்லாததால், வீட்டின் முன் பக்க சுவற்றில் சம்மனை அதிகாரிகள் ஒட்டிச் சென்றனர். அதில், அசோக் குமாரின் மனைவி நிர்மலா கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வே எண் 29இல் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கரூர்-மதுரை நெடுஞ்சாலையில் ராம் நகர் நுழைவாயில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை போலீசார் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்த கட்டட பொறியாளர் கட்டடத்தை அளவிடும் சோதனையை மதியம் 12 மணிக்குத் தொடங்கி இரவு 7:30 மணி வரை மேற்கொண்டனர்.
முன்னதாக கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி நிர்மலா பெயரில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட மாளிகை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதாக யூடியூப் பிரபலம் சவுக்கு சங்கர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பேசி வந்தார்.
அதன் பின்னர் மே 28ஆம் தேதி முதல் முறையாக பிரமாண்டமாக கட்டி வரும் வீட்டினை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பின்னர் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் வீட்டுக்கு டைல்ஸ், கிரானைட் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கோவையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் மற்றும் கரூரில் உள்ள தனலட்சுமி கிரானைட் நிறுவனம் ஆகியவற்றில் ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிகாலை வரை இரண்டு நாட்கள் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி மீண்டும் கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நிர்மலாவின் பெயரில் கட்டப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய புதிய மாளிகையை கட்டட பொறியாளர் உதவியுடன் அளவிடும் பணியினை துவங்கி இருப்பது அமலாக்கத் துறையின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.
இதனால் செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கல் உருவாகியுள்ளது. பிரமாண்ட மாளிகை கட்டி வரும் இடத்தை வாங்கியது முதல் கட்டுமானப் பொருட்கள் கொள்முதல் செய்தது வரை பல கோடி ரூபாய் புதிய வீடு கட்டுவதற்கு பணம் பரிவர்த்தனை ஆகியவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வணிக நோக்கில் சுரண்டப்படும் நிலத்தடி நீர் குறித்து வழக்கு தள்ளி வைப்பு!