கரூர்: லாலாப்பேட்டை அருகே பசுபதிபாண்டியன் ஆதரவாளரான கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அதிகாலை தனது தோட்டத்திற்க்கு சென்றபொழுது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடத்திய விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் குமுளி ராஜ்குமார் (41), தூத்துக்குடி இசக்கி குமார்(49) ஆகிய இருவரையும் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
தொடர்ந்து நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட குமுளி ராஜ்குமார் கொலைசெய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு வந்துள்ளார்.
இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட கருப்பத்தூர் ராஜா என்கிற ராஜபாண்டியன் உதவியுடன் அதிகாலை நேரத்தில் தனியாக வெளியே வரும் கோபாலகிருஷ்ணனை தீர்த்துக்கட்ட குமுளி ராஜ்குமார், கோபாலகிருஷ்ணனின் கூட்டாளி தூத்துக்குடி இசக்கி குமார் உள்ளிட்டோர் உதவியுடன் கடந்த அக்.6ஆம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணனை திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கொலை செய்யபட்ட கோபாலகிருஷ்ணன் கரூர் மாவட்டத்தில் வசித்து வந்தாலும், தென்மாவட்டங்களில் நடைபெறும் கொலை சம்பவங்களை கூலிப்படைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். கோபாலகிருஷ்ணன், குமுளி ராஜ்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து பிறகு பிரிந்துவிட்டனர்.
பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட போட்டி காரணமாக ஒருவரை ஒருவர் தீர்த்துக்கட்ட முடிவு செய்து இருந்ததாகவும், அதில் குமுளி ராஜ்குமார் முந்திக் கொண்டு கோபாலகிருஷ்ணனை கொலை செய்ததாகவும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தது, இக்கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க:ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களுக்கு மீண்டும் தடை?