கரூர்: தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் மேற்கொள்ளுவோருக்கு சட்டரீதியான பாதுகாப்பும் பல்வேறு உரிமைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் சாதி மறுப்பு திருமணம் செய்வோரை உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து நாட்டாமைகள் சிலர் உள்ளூர் திருவிழாக்கள் மற்றும் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிக்காமல் அவமதித்தும் வருகின்றனர்.
இது போன்ற ஒரு சம்பவம் தான் கடவூர் வட்டம் மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஊராளிக் கவுண்டர் சமுதாயத்துக்கு சொந்தமான குலதெய்வமான ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ பட்டவன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ முனியப்பன் கோயில்களில் சாதி மறுப்பு திருமணம் செய்தவரை கோயிலுக்குள் நுழையக் கூடாது என கட்டப் பஞ்சாயத்து நடத்தியும், கோயில் திருவிழாவுக்கு பங்காளிகள் செலுத்தும் வரி ஆகியவற்றை பெற்றுக் கொள்ள மறுத்த சம்பவம் தற்போது வெட்ட வெளிச்சமாக உலகுக்கு தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் மே 28ஆம் தேதி மாபெரும் கிடாவெட்டு பூஜையும், திருவிழாவும் விழாக் கமிட்டியினர் மற்றும் 175 பங்காளிகள் அனைவரும் முடிவெடுத்து திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில் கோயில் நிர்வாகி மற்றும் பூசாரிகள் ஆகியோர்கள் அனைவரும் சேர்ந்து, சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களான சுப்பிரமணி - தீபா, முருகேஷ் - கார்த்திகா, மகேந்திரன் - பிரியதர்ஷினி, சுரேஷ் - தமிழ்ச்செல்வி, பரமேஸ்வரன் - முத்துலெட்சுமி, மெணிகண்டன் - லாவண்யா, இளங்கோவன் - திவ்யா ஆகிய ஏழு குடும்பங்களை கோயில் கமிட்டி நிர்வாகிகள் சாமி கும்பிடவும், வரி வாங்காமலும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.
கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள கூடாது என்றும் அவ்வாறு கோயில் பூஜைகளில் கலந்துகொள்ள வேண்டுமெனில் உங்களது மனைவி, குழந்தைகளை விவகாரத்து செய்து விட்டு வந்தால் தான் கோயில் பூஜைகளில் கலந்துகொள்ள அனுமதிப்போம் என்று கூறுவதாக கூறி மே 22ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் குறை தீர்க்கும் முகாமில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனு அளித்தனர் .
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மணிகண்டன் கூறுகையில், “கோயில் நிர்வாகிகளான ராஜாமணி (TNEB), தங்கவேல் (Retired DSP) ஆகியோர் மீறி உள்ளே வந்தால் உங்களை எல்லாம் அடித்து விரட்டி விடுவோம் என்றும் மிரட்டுகிறார்.
இதனால் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுத்தேன்.
கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குறைதீர்ப்பு முகாமில் அவர் கொடுத்து அவரது உத்தரவின் பேரில் குளித்தலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று விசாரணை செய்த போது, மேற்படி எதிர் மனுதாரர்கள் அனைவரையும், என்னையும் மற்றவர்களையும் சாமி கும்பிடவும் எங்கள் ஊரில் கலந்து பேசி பதில் சொல்ல ஒரு வார கால அவகாசம் கேட்டு வெளியே வந்தனர்.
பின்னர் எங்களிடம் மேற்படி எதிர்மனுதாரர்கள் மற்றும் தங்கவேல் (retired DSP) ‘போங்கடா நீங்க இல்லாம நாங்க சாமி கும்பிடுவோம், உங்களுக்கு எந்த உரிமையும் கொடுக்க முடியாது நீங்கள் எங்கு சென்று மனு கொடுத்தாலும் எங்களை எந்த அதிகாரியும் ஒன்றும் செய்ய முடியாது’ என்று ஆபாசமான வார்த்தைகளால் திட்டி எங்களை மிரட்டினர்.
எனவே மே 16ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி முடிய மேற்படி ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ மதுரைவீரன், ஸ்ரீ பட்டவன் ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ முனியப்பன் கோயில் திருவிழாவில் பொங்கல் வைக்க , கோயிலுக்குள் செல்லவும் அனுமதிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: கீழமரத்தோணி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்த உறவுகள் ஒன்று கூடுதல் நிகழ்வு!