கரூர்: கரூர், கோவை சாலையில் அமைந்துள்ள எல்ஜிபி பெட்ரோல் பங்க் எதிரே உள்ள மதுக் கடையில் (கடை எண்: 4921) அனுமதி பெற்ற பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதே போன்று கரூர் உழவர் சந்தைக்கு எதிரே உள்ள அரசு மதுபான கடை எண் :4934 கடையுடன் இணைந்து, அரசு அனுமதி பெற்ற மதுபான பார் செயல்பட்டு வருகிறது.
இந்த 2 கடைகளிலும், டிசம்பர் 29ஆம் தேதி மாலை 5 மணி அளவில், டாஸ்மாக் நிர்வாகத்திற்குச் செலுத்த வேண்டிய மாதவாடகை தொகையை உடனே வழங்க வேண்டும் இல்லை என்றால் டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பதாக, மாவட்ட துணை மேலாளர் கூறினார். பார் உரிமையாளர் ஒவ்வொரு மாதமும் முறையாக வங்கி மூலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதால், தனக்கு அவகாசம் வழங்க வேண்டும், திடீரென டாஸ்மாக் பாரை மூடினால் தொழில் நஷ்டம் ஏற்படும் என கூறினார்.
இதனை ஏற்க மறுத்த டாஸ்மாக் அதிகாரிகள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேபோல் அங்குச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களையும் டாஸ்மாக் மாவட்ட துணை செயலாளர் ஒருமையில் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு, கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அண்ணம்மாள், விசாரணை மேற்கொண்டு, பார் உரிமையாளர்களுக்கு உரிய அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன்பின், ஆய்வு மேற்கொண்ட கரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அண்ணம்மாளிடம் செய்தியாளர்களை ஒருமையில் பேசியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு "இனி இது போன்ற சம்பவம் நடைபெறாது" என பதில் அளித்தார். அதன்பின், தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், "அதேபோல் கரூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து அரசு அனுமதி பெற்ற மதுபான பார்களுக்கான அனுமதிக்கலாம் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய இருப்பதால், கடைசி மாத நிலுவை தவணையை வசூலிக்க டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, மாத இறுதியில் விடுமுறை வருவதால் வங்கி வரவுவோலை (Demand Draft) வழங்க முடியாது என பார் நடத்துபவர்கள் கூறியதை ஏற்று உரியக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெரினாவில் விஜயகாந்த் சிலை.. பாடபுத்தகத்தில் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு வேண்டும் - சேலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன் கோரிக்கை