கரூர் மாவட்டத்தில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் ரோஸியுடன் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி நேரில் சென்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்து கல்லூரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.
அவருடன் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி உடனிருந்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி கூறுகையில், “கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை வெண்டிலேட்டர் பற்றாக்குறை இருந்தது. அவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் நானும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜியும் தலா பத்து வெண்டிலேட்டர்களை எங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி இருக்கிறோம்.
மேலும், கல்லூரிக்கு வேறு உபகரணங்கள் எதுவும் தேவை என்றால் அதையும் செய்யத் தயாராக இருக்கின்றோம். கரூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை நான்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றேன்.
மருத்துவ பணியாளர்கள், காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் அனைவரும் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். மனமார்ந்த நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி நிஜாமுதீன் மாநாடு சென்று திரும்பிய 42 பேர் கடலூர் மருத்துவமனையில் அனுமதி!