கரூர் மாவட்டம் தரகம்பட்டியில் சேருகாரனூரில் உள்ள ஒரு குடோனில் குட்கா, பான் பராக் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தரகம்பட்டியைச் சேர்ந்த மிட்டாய் சுப்பிரமணி என்பவர் தரகம்பட்டியில் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். அதேபோல் குழந்தைவேலு என்பவர் வெற்றிலை கடை வைத்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான குடோன் தரகம்பட்டி அடுத்த சேருகாரனூரில் உள்ளது. இந்த குடோனில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பான்பராக் பொருள்கள் மொத்தமாக பதுக்கி வைத்து, தினசரி கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளது தெரியவந்தது.
குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்னரை டன் குட்கா மற்றும் பான் பராக் பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.
மேலும் குடோனில், அனுமதியின்றி தோரண வெடி மருந்து (பட்டாசு மருந்து ) மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு இருந்த 5 மூட்டை வெடிமருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி வைத்திருந்த மிட்டாய் சுப்பிரமணி, மற்றும் குழந்தைவேலு ஆகிய இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.