கரூர் அறிவாலயத்தில் எல்லோரும் நம்முடன் என்ற தலைப்பில் நடைபெற்ற இணையதள வழியிலான உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்றனர் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,” வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார், கரூர் மாவட்டத்தில் திமுக நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். ஆளுங்கட்சி என்னிடமோ? அல்லது வேறு யாரிடமோ பந்தயம் கட்ட தயாரா?, சவால் விட தயாரா? திமுகதான் வெற்றி பெறும் மு.க ஸ்டாலின்தான் முதலமைச்சர்.
இதேபோல் அதிமுகவில் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். அவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை, எப்படி நாட்டை வழி நடத்துவார்கள். தமிழ்நாடு மக்களின் ஒருமித்த முடிவு திமுக வெற்றி பெறும் என்பதுதான். ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள்” என்றார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்!