கரூர்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொளந்தாகவுண்டனூரில் பழுதடைந்துள்ள 112 குடியிருப்புகளை அகற்றி, ரூ.14.99 கோடி மதிப்பில், புது குடியிருப்பு கட்டப்படவுள்ளது.
புதிய கட்டடம் கட்டி முடிக்கும் வரை, குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ. 24,000 வீதம் ரூ. 2 கோடியே 68 லட்சத்து 8 ஆயிரம் கருணைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தலைமையில் கரூர் காந்திகிராமம் தனியார் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து 'அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ், ரூ. 2.10 லட்சம் மானியத்துடன், சுயமாக வீடு கட்டும் 100 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் குடியிருந்த ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக சென்னை அடையார், கூவம் நதிக்கரை ஓரம் குடியிருந்த அடிப்படை வசதி ஏற்ற மக்களுக்கு 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்ற வாரியத்தை முதல் முறையாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார்.
1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வீடுகள், தற்போது 50 ஆண்டுகளைக் கடந்து சிதலம் அடைந்த நிலையில், மக்கள் வாழ்ந்து வருவதைக் கடந்த ஓராண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற திமுக அரசு கவனத்தில் கொண்டு கணக்கெடுப்பு நடத்தினர்.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் 30ஆயிரம் வீடுகள் வாழத் தகுதியற்ற சிதலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் என கணக்கிடப்பட்டது. இவற்றில் சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. கடந்த நிதி ஆண்டில் ரூபாய் ஆயிரத்து 200 கோடி மதிப்பில் 7ஆயிரத்து 200 வீடுகளும்; நடப்பு நிதியாண்டில் மீண்டும் 7ஆயிரத்து 200 அடுக்குமாடி வீடுகளும் கட்ட ரூபாய் ஆயிரத்து 200 கோடி என மொத்தம் 2ஆயிரத்து 400 கோடி மதிப்பில் 15ஆயிரம் வீடுகள் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டத்திலுள்ள கொளந்தாகவுண்டனூர் அடுக்குமாடி குடியிருப்பு 1995ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீடுகள் ஆகும். 112 பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். தற்பொழுது கட்டடம் வலுவிழந்து காணப்படுவதால் புதிதாக வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு முயற்சி மேற்கொண்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் சுமார் 150 வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளோம்.
அங்கு குடியுள்ளவர்கள் 15 மாதங்களுக்கு கட்டடப் பணிகள் முடியும் வரை வெளியே தங்கி இருக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு கருணைத்தொகையாக ரூபாய் 24 ஆயிரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 8ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு ரூபாய் 24 ஆயிரம் ஆக உயர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருந்த இடத்தில் முன்னர் இருந்த பழைய கட்டடத்தில், வெறும் 200 சதுர அடியில் மட்டுமே அறைகள் இருந்தன. அதனைக்கருத்தில்கொண்டு தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு 420 சதுர அடி கொண்ட அறைகளாக கட்டுவதற்கு முதலமைச்சர் ஆலோசனைப் பெற்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எண்ணற்றத் திட்டங்கள் இருந்தாலும் அதிக மானியம் பெறக்கூடிய திட்டமாக நகர்ப்புற வாழ்வாதார வீடு கட்டும் திட்டம் உள்ளது. உதாரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒன்றிய அரசு வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது. ஆனால், அரசு 7 லட்சம் ரூபாய் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒரு பயனாளிக்கு வழங்குகிறது. மொத்தம் ரூ.10 லட்சம் நிதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில், மீதமுள்ள ஒன்றரை லட்சம் மட்டுமே பயனாளிகள் செலுத்தக்கூடிய தொகையாகும்.
பழைய அடுக்குமாடி கட்டடம் இடிக்கப்பட்டு அடுத்த 15 மாதங்களில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதே இடத்தில் மீண்டும் மக்கள் குடியிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்களிடமிருந்து குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை அமைக்க, முன்னர் இருந்த தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளிடம் வசூல் செய்து, எந்த நிதியில் அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், தற்பொழுது உள்ள அரசு நகர்ப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். நகர்ப்புற அரசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் பகுதிகளில் முறையான தூய்மை இல்லாததைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தலைமையில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, குடிநீர் மற்றும் வடிகால் மின்சாரம் சார்ந்த குறைகள் ஆகியவற்றை கோரிக்கைகளாக பெற்று உடனடியாக தீர்க்க தமிழ்நாடு அரசு ஒரு புதிய குழுவை அமைத்துள்ளது.
மக்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் இக்கூட்டத்தில் தெரிவித்து உடனடி தீர்வு காணலாம். நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வரும் மக்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்டு சேர்ப்பதும், நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் வழி நடத்தி வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: புற்றுநோய்ப்பாதிப்பு என்பது நமக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்