கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள கணவாய் கிராமத்தைச் சேர்ந்த கோயம்மாள் என்பவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று மதியம் அவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஆடு அருகில் இருந்த கிணற்று பகுதியைச் சுற்றித் திருந்திருக்கிறது.
இலை, தழைகளை மேய்ந்து கொண்டிருந்த ஆடு, திடீரென தவறி கிணற்றில் விழுந்துள்ளது. சுமார் 150 அடி ஆழம் கொண்ட அந்தக் கிணற்றில் ஆடு விழுந்ததைக் கண்ட கோயம்மாள், அப்பகுதியை சேர்ந்த துரைசாமி (43) என்பவரை உதவிக்கு அழைத்தார்.
கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்க உதவ வந்த துரைசாமி, கயிறு கட்டி கிணற்றில் இறங்கினார். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்ததில், கிணற்றின் உள்ளே இருந்த பாறைகள் தலையில் பலமாக மோதியதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். இறந்த துரைசாமியின் உடலை உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
மேலும், துரைசாமியின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்த அரவக்குறிச்சி காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கணவாய் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : நாகை வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு: கூட்டமாக வந்து பதிவுசெய்த அமைப்புசாரா தொழிலாளர்கள்