கரூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தனி தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர் கீதா. இவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கிருஷ்ணராயபுரத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நினைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டுவந்தார்.
ஆனால், கிருஷ்ணாராயபுரத்தில் கரூர் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளரும் கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான தானேஷ் என்கிற முத்துக்குமார் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா கரூர் காந்திகிராமத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றுவதற்காக கூவத்தூரில் வைத்து மிரட்டப்பட்டேன். ஒரு பெண் என்றும் பாராமல் என்னை கடுமையான வார்த்தைகளால் பேசினார்கள். இருப்பினும் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற கனவை நனவாக்கும் அடிப்படையில், முதலமைச்சர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தேன்.
இப்போது மகளிர் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது ஏன். அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மகளிர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் நான் இந்த கேள்வியை எழுப்புகிறேன்.
கட்சியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல பெயர் பெற்ற சட்டப்பேரவை உறுப்பினராக நான் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். எனக்கு வரும் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு பெற்று தருவதாக மாவட்ட செயலாளராரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் என்னிடம் சொல்லி ஏமாற்றிவிட்டார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எனக்கே இந்த நிலைமை என்றால், அதிமுகவில் உள்ள சாதாரண தொண்டர்களுக்கு என்ன நிலைமை என்பதை தலைமை விளக்க வேண்டும். நான் கிருஷ்ணராயபுரம் தனி சட்டப்பேரவை தொகுதியில் எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரூரில் மீண்டும் களமிறங்கும் எம்.ஆர். விஜயபாஸ்கர்