கரூரைச் சேர்ந்த குமரேசன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தமிழ்நாட்டின் முக்கியமான தொழில் நகரமாகத் திகழும் கரூரின் பேருந்து நிலையம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது பழுதடைந்து காட்சியளிக்கிறது. இங்கு சுமார் 40 பேருந்துகள் மட்டும் நிறுத்த முடியும் என்றாலும், சுமார் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. போதுமான இடவசதி இல்லாததால், பெரும்பாலான பேருந்துகள் வெளியே நிறுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
கரூர் தோரணக்கல்பட்டியில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜன.29இல் வெளியானது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதால், டெண்டர் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்தும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே, புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளை விரைவுபடுத்தி பேருந்து நிலையத்தை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.தாரணி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரூர் தோரணக்கல்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.