தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவுநேற்று (ஏப்ரல் 6) காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 4,33,016 பேர், பெண் வாக்காளர்கள் 4,66,140 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 80 பேர் என மொத்தம் 8,99,236 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். நேற்று நடந்த வாக்குப்பதிவில் கரூரில் மொத்த 83.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, ”ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் கரூரில் ஆண் வாக்காளர்கள் 3,37,389 பேர், பெண் வாக்காளர்கள் 3,87,630 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 15 பேர் என மொத்தம் 7,55,034 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். மாவட்டத்தில் மொத்த 83.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில், அதிக வாக்குகள் பதிவானது கரூர் மாவட்டம் தான்.
கரூரில் 161 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் 6 கரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு புகலூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனர்.
அதேபோல குளித்தலை கிருஷ்ணராயபுரம், கரூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தமாக 9 கரோனா நோயாளிகள் வாக்களித்தனர். கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குப்பதிவு அதிகரிப்பதால் வேட்பாளர்களின் வெற்றி,தோல்வி வாக்கு வித்தியாசமும் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இளம் வாக்காளர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் வாக்குப்பதிவு செய்தனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.