திருவள்ளுவர் மாணவர் இளைஞர் இயக்கம், பரணிபார்க் பள்ளி இணைந்து கரூர் பரணிபார்க் பள்ளி வளாகத்தில் சங்க இலக்கிய நூல்களைத் தமிழ்மொழியின் முதல் எழுத்து வடிவமான தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகங்களாக ஆவணப்படுத்தும் தமிழி உலக சாதனை முயற்சி நடைபெற்றது.
சங்க இலக்கிய அறிஞரும், மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் தலைவருமான பேராசிரியர் முனைவர். ராமராஜபாண்டியன், கல்வெட்டு ஆய்வாளர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கருப்பண்ணன், உலக சாதனை புத்தக நடுவர் டிராகன் ஜெட்லீ உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர், நடுவர்களாகக் கலந்துகொண்டனர்.
பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தமிழி எழுத்துப் பயிற்சிபெற்ற மொத்தம் 4500 சாரணர் ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து சங்க இலக்கியத்தின் 36 நூல்களையும் தமிழி எழுத்து வடிவத்தில் புத்தகங்களாக ஆவணப்படுத்தும் உலகச் சாதனை இந்த முயற்சியில் கலந்துகொண்டனர்.
பதிற்றுப்பத்து நூல் மூன்று நிமிடம் 41 நொடிகள் தமிழி எழுத்து வடிவில் எழுதி முடித்தனர். நிறைவாக நற்றிணை சங்க இலக்கிய நூல் 24 நிமிடம் 55 வது நொடியில் எழுதி முடிக்கப்பட்டது. 25 நிமிடத்தில் சங்க இலக்கியங்களில் பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் மொத்தம் 36 நூல்களும் முழுமையாகத் தமிழி எழுத்தில் பள்ளியின் முதல்வர் ராமசுப்பிரமணியன் தலைமையில், ஆசிரியர்கள் மாணவர்களால் 24 நிமிடம் 55 நொடியில் எழுதி முடிக்கப்பட்டது.
எழுதி முடிக்கப்பட்ட தமிழி சங்க இலக்கிய கையெழுத்து பிரதிகள் அனைத்தையும், கணினியின் உதவியோடு விரைவில் புத்தகமாக வெளியிட்டு சங்க இலக்கிய நூல்களை தமிழி வடிவிலான புத்தகங்களாக ஆவணப்படுத்துவோம் என்று ராம சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழின் பெருமையை உலகறியச் செய்த இந்த முயற்சிக்கு தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் பொதுமக்களும் பாராட்டினர்.
இதையும் படிங்க: நாப்கின் தயாரிக்கும் பெண்ணின் நம்பிக்கை!