கரூர் நாடாளுமன்ற தொகுதியின் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி, கருங்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி இன்று கூட்டணிக் கட்சிகளோடு பொதுமக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பொதுமக்களிடம் பேசுகையில்,
"பஞ்சாயத்து தலைவர் கிடையாது. கவுன்சிலர் கிடையாது. மாவட்ட கவுன்சிலர் கிடையாது. மக்கள் எவ்வளவு சிரமத்தில் இருக்கிறார்கள் என்று புரியாமல் தேர்தல் நடத்தினால் தோற்று விடுவோம் என்ற பயத்தினால் பஞ்சாயத்து தேர்தலை கூட நடத்தாமல் இருக்கிறார்கள். பஞ்சாயத்து தேர்தலை நடத்த பயப்படுகிற அரசுக்கு அதிகாரம் என்ன வேண்டியிருக்கிறது. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று மத்தியில் மட்டுமல்ல மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். பத்து வருடமாக எம்பி-யாக இருந்திருக்கிறார். துணை சபாநாயகராக இருந்திருக்கிறார். அவருடைய பெயர் என்ன என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை", என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "அதிமுக வேட்பாளர் தம்பிதுரை 45 கல்லூரிகளில் கொள்ளையடித்த பணத்தை கொண்டு வந்து கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் பதுக்கி வைத்திருக்கிறார். அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலிருந்து ரூ.2 கோடி கைப்பற்றப்பட்டிருக்கிறது. கரூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் சோதனை நடத்தி ஒவ்வொருவர் வீட்டிலும் எவ்வளவு பணம் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். கரூர் பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரைக்கும் தேர்தல் முடிந்து விட்டது.
எங்கே சென்றாலும் மக்கள் மனுக்களோடு வந்து நிற்கிறார்கள். நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனால் நீங்களும் அவரைப் போல் வராமல் போய் விடாதீர்கள். தங்கள் பகுதிக்கு பேங்க் வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுவதாகவும், மக்கள் மனுக்கள் கொடுக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் தம்பித்துரை அவர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரியான ஒரு மூத்த அரசியல் தலைவர் தவறான அதிகார துஷ்பிரயோகத்தையும், மிரட்டலையும் கையாளக் கூடாது", என்றார்.