உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுஊரடங்கு நடைமுறையில் இருந்தது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் சில நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதித்து, தளர்வுகள் அளித்துள்ளது. இருப்பினும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து அரசு இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
ஓராண்டு நெருங்கியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை, கல்வி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டும் மாணவ - மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு திட்டமிடப்பட்டு அட்டவணைப்படி வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. அதற்கு மாணவர்களும் தங்களைத் தினமும் தயார்படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால், இந்தக் கல்வி ஆண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புதுவிதமான ஆண்டாக அமைந்து இருக்கிறது.
எந்த திட்டமிடுதலும் உட்படாத ஒன்றாக மாறியிருக்கிறது. தற்பொழுது கற்றல், கற்பித்தல் முறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு ஆன்லைன் கல்வி முறையாக படிப்படியாக பயிற்றுவிக்கும் முறை மாறியுள்ளது. இது ஆசிரியர்களுக்கு ஒரு வகையில் எளிதாக இருந்தாலும், மாணவர்களுக்குப் பாடங்களைக் கொண்டுசெல்வது மிகவும் சவாலாக இருந்து வருகிறது. மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் தொடர்ந்து மாணவர்களுக்கு, படிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் வகுப்பறைகள் இல்லை, ஆசிரியரின் நேரடிப் பார்வை இல்லை என்பது போன்ற பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இதையெல்லாம் மீறி மாணவர்கள் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்த ஆன்லைன் கல்வியில் பெற்றோர்களின் பங்கு முக்கியமாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கல்வி சாத்தியமாகும்.
இப்படிப்பட்ட ஆன்லைன் வகுப்புகளை அரசு நடத்தி வந்தாலும் குழந்தைகள் இருக்கிறார்களா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என விரும்பிய பல பள்ளிகள் புது விதமான அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கரூரை அடுத்த புலியூர் பகுதியில் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளை வாட்ஸ்அப் மூலம் வீடியோவாக மாணவர்களுக்கு கொண்டு சென்றனர். ஆன்லைன் வகுப்பில் குறைந்த நேரம் மட்டுமே கற்க முடியும் என்பதை உணர்ந்த அப்பள்ளி ஆசிரியர்கள் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தனித் திறமையை மேம்படுத்தும் வகையில் யோகா, ஓவியம், கைவினை பயிற்சிகள் போன்றவற்றை வீடியோவாக எடுத்துப் பள்ளி மாணவர்களுக்கு அனுப்பி பயிற்சியளித்து வருகின்றனர்.
'தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்' என்பதற்கு எடுத்துக்காட்டாக கைவினைப் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வீட்டில் உபயோகமற்ற முறையில் இருக்கும் காகிதம், அட்டை, ஓடு போன்றவற்றைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களை செய்து அசத்தி வருகின்றனர்.
இதனை அறிந்த அப்பள்ளி தலைமையாசிரியர் அனைவரது கைவினைப் பொருட்களையும் அறை முழுவதும் சேகரித்து வைத்துள்ளார். இதற்காக பள்ளியின் சார்பில் சிறந்த கைவினைப் பொருட்களுக்கான பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்று வந்தாலும் கல்வியில் ஏற்படும் குழப்பங்கள், சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக அப்பள்ளி ஆசிரியர்கள் சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து தினமும் 30 மாணவர்கள் விகிதம், வாரம் ஒரு முறையாவது மாணவர்கள் இல்லத்தில் சென்று கற்றுக் கொடுக்கின்றனர். இந்த அணுகுமுறை மாணவர்கள் இடையே மட்டும் அல்லாது பெற்றோரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அணுகுமுறை காட்டுத்தீ போல் பரவி 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை அரசு உதவிபெறும் பள்ளியில் பெற்றோர்கள் தானாகவே முன்வந்து சேர்த்துள்ளனர். தற்பொழுது இந்தப் பள்ளி, மாணவர் சேர்க்கையில் சிகரம் தொட்டுள்ளது.
இது குறித்து மாணவி துர்காதேவி தெரிவிக்கையில், 'பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் வாட்ஸ்அப் மூலம் கைவினைப் பொருட்கள் குறித்த காணொலியை ஆசிரியர்கள் அனுப்புகின்றனர். இதனை வீட்டிலிருந்து பொழுதுபோக்காக உபயோகமற்ற பொருட்களை வைத்து செய்து வருகிறோம். இதனால் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இல்லம் சென்று கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் சிவசாமி என்பவர் கூறுகையில், 'அரசு உதவி பெறும் பள்ளியில் 28 ஆண்டுகளாகப் பொருளியல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். பாடங்கள் வாட்ஸ்அப் காணொலி மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு வந்தாலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் வாழ்க்கையில் இது முக்கியமான தருணம். எனவே, புரியாத சில பாடங்களை வீட்டிலேயே சென்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். இதனால் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து 12ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா தெரிவிக்கையில், 'ஆன்லைனில் கல்வி கற்பது மூலமாக சில பாடங்கள் இயல்பாக புரியவில்லை. இதனால் ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன். இருந்தாலும் ஆசியர்கள் வீட்டிலேயே வந்து எங்களுக்கு தேவையான பாடங்களை கற்றுத் தருகின்றனர். தற்போது நாங்கள் எவ்வாறு படிக்கிறோம் என்பதை எங்களது பெற்றோர்கள், இப்போது நன்கு புரிந்து கொண்டு உள்ளார்கள்' எனக் கூறினார்
மாணவியின் பெற்றோர் கார்த்திகா தெரிவிக்கையில், 'இது கரோனா தொற்று காலகட்டம் என்பதால், ஆசிரியர் வீட்டிலேயே வந்து பாடம் கற்பிக்கும் முறை காமராஜர் ஆட்சிக் காலத்தில் இருந்த திண்ணைக் கல்வி முறையை நினைவுபடுத்துகிறது. மாணவர்களுக்கு இந்த ஆண்டு வீணாகப் போய் விடும் என்ற பயத்தில் இருந்த பொழுது வீடுவீடாக வந்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' எனக் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஜோதிகுமார் பேசுகையில்,'ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் பள்ளியில், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி மூலம் தனிப்பட்ட திறமையை வளர்க்க வேண்டும் என்பதற்காக கைவினைப் பொருட்கள், ஆசிரியர் மூலமாக கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்களை விட மாணவர்கள் மிகவும் சிறப்பாக கற்றுக்கொண்டு வருகின்றனர். அதைவிட குறிப்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் கல்வியில் இருக்கும் சந்தேகங்களை ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று 600-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சந்தித்து சொல்லித் தருகின்றனர்.
வீடு வீடாகச் சென்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இந்த அணுகுமுறை 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை, அரசு உதவி பெறும் பள்ளியில் சேர்த்துள்ளது. ஆம். எங்கள் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் தற்போது கூடுதலாக இணைந்துள்ளனர்' எனப் பூரிப்புடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 வருடமாக கணவனை இழந்து தவித்த பெண்ணை கொன்ற மாமனார்!