கரூர்: கரூர் மாவட்டம் கரூர் தாலுகாவிற்கு உட்பட்ட புலியூர் புரவிபாளையம் பகுதியில் தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் பெரியண்ணன் என்பவர் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் பெரியண்ணன் கடந்த 2002 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரது மனைவி ஆராயி அம்மாள் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதற்குப் பிறகு வாரிசுதாரர்களான மகன்கள் கோவிந்தராஜ், நடேசன், ராமலிங்கம் மற்றும் மகள்கள் தங்கம்மாள் அமிர்தம் பானுமதி உள்ளிட்ட ஏழு பேர் அந்த 80 சென்ட் நிலத்தில் கால்நடையில் தேவைக்காக சோளத்தட்டு பயிரிட்டு உழுது வந்தனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு புலியூர் பேரூராட்சி அதிகாரிகள் திடீரென நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த சோளத் தட்டுகள், தென்னம்பிள்ளை ஆகியவற்றை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றிவிட்டு நேற்று (ஆகஸ்ட் 9) காலை 10 மணியளவில் கம்பி வேலை அமைப்பதற்கான பணிகளை துவக்கினர். இதுகுறித்து நிலத்தை பயன்படுத்தியவர்களும் அவரது வாரிசுதாரர்களும் அந்த இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் வட்டாட்சியர் வெங்கடேசன், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ், புலியூர் கிராம நிர்வாக அதிகாரி வினோத் ஆகியோர் சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்டவர்கள் மனுவாக அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் தாசில்தார் தெரிவித்ததால், கோரிக்கை மனுவினை அளித்துவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: ஈக்வடார் நாட்டில் பயங்கரம் - தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர் சுட்டுக் கொலை!
இது குறித்து ஈ.டிவி பாரத் செய்திகளுக்கு புலியூர் புரவிபாளையம் கருப்பண்ணன் வாரிசுதாரான கோவிந்தராஜ் அளித்த சிறப்பு பேட்டியில், அரசு அதிகாரிகள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜேசிபி இயந்திரம் கொண்டு பயிர்களை அகற்றி வேலி போட முயற்சி செய்து வருவதாக தகவல் வந்தது. அதன்படி நேரில் வந்து பார்த்தபோது புலியூர் பேரூராட்சி நிர்வாகமே இப்பணிகளை மேற்கொண்டது என்பதை அறிந்து கொண்டோம்.
சுமார் மூன்று நான்கு தலைமுறையாக பயன்படுத்தி வரும் விவசாய நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அரசு அதிகாரிகள் செயல்படுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தால் கைது செய்து சிறையில் அடிப்போம் என காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர். மேலும் வாழ்வாதாரமாக இருந்த நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்துவதால் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. உடனடியாக இது குறித்து தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், அரசு அதிகாரிகள் தரப்போ விவசாய நிலத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பீமா ரசீது செலுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை இந்த இடத்தை பயன்படுத்தி வருபவர்கள் பட்டாவுக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. புலியூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு இடம் தேவை என்பதால் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை ஓரமாக உள்ள இந்த இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிதாக அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பவர்களை விட்டுவிட்டு முறையாக வரி செலுத்தி பயன்பாட்டில் இருந்து வந்த விவசாய நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தும் நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக மதுரை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்; பொதுமக்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பிதழுடன் தக்காளி வழங்கிய நத்தம் விஸ்வநாதன்!