தமிழ்நாடு கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் கலையியல் அறிவுரைஞர் பொறுப்பில் பிரபல நடனக்கலைஞர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு அரசு சார்பில் நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இசைக்கல்லூரிகள் மற்றும் இசைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
ஜாகிர் உசேன் கடந்த பிப்.28ஆம் தேதி கரூர் இசைப்பள்ளியில் ஆய்வு செய்தபோது, அங்குள்ள பரதநாட்டிய ஆசிரியையிடம் தலைமை ஆசிரியையை வெளியே அனுப்பிவிட்டு, அவரது அறையில் கதவுகளை அடைத்துக்கொண்டு, தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக கலைப் பண்பாட்டு துறை இயக்குநர் காந்தியிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியை புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள கலைப்பண்பாட்டு துறை இயக்குநரகத்தில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் கட்ட விசாரணை, குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று(ஏப்ரல்.22ஆம் தேதி) சென்னையில் உள்ள தமிழ்ப் பண்பாட்டு இயக்குநரகத்தில் இறுதிகட்ட விசாரணை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.
இந்த விசாரணையில் சம்பந்தப்பட்ட இசைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் புகார் தெரிவித்த பரதநாட்டிய ஆசிரியை ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
இதனிடையே கலைப்பண்பாட்டுத்துறையில் நடன ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை ஏப்ரல் 8,9ஆம் தேதிகளில் வழங்க இருந்த ஜாகிர் உசேனுக்கு பதிலாக, வேறு பயிற்சி ஆசிரியரை வைத்து ஏப்ரல் 29 மற்றும் 3ஆம் தேதிகளில் இரு நாட்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட இருப்பதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நான் முன்னமாதிரி இல்ல Sir.., திருந்திட்டேன்..!' - வடிவேலு