கரூர் : காவிரி ஆற்றுப்படுகை மற்றும் அமராவதி ஆற்றுப்படுகைகளில் அரசு அனுமதியுடன் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாட்டு வண்டிகள் மூலம் உள்ளூர் கட்டடப் பணிகளுக்கு தேவைப்படும் மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர். கடந்த ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் எம்சாண்ட் மணல் எனப்படும் செயற்கை மணல் ( M-Sand, P- Sand) உற்பத்தி நிலையங்கள் க.பரமத்தி, அரவக்குறிச்சி, புகலூர் உள்ளிட்டப் பகுதிகளில் திறக்கப்பட்டன.
இதனால் ஆற்றுப்படுகையில் மணல் அள்ளும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின் பரப்புரையின்போது திமுக சார்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாட்டு வண்டியில் மணல் அள்ளும் விவசாயிகள் திமுக ஆட்சி அமைந்ததும் அடுத்த ஐந்து நிமிடத்தில் மணல் அள்ளலாம், அலுவலர்கள் வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அறிவித்தது என்ன?
ஆனால், திமுக அரசு அமைந்து ஒன்பது மாதங்கள் ஆன பிறகும் மணல் அள்ளுவதற்கு அனுமதி கிடைக்காததால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீண்டும் அரசு அனுமதியுடன் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் உள்ளூர் தேவைக்கு மணல் அள்ளுவதற்கு மாட்டுவண்டி மூலம் விவசாயிகளுக்கு அரசு மணல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, இணையம் மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையில் மணல் விற்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுபடுகளில் நன்னியூர்புதூர், நெரூர்மல்லபாளையம், லாலாப்பேட்டை கள்ளப்பள்ளி, குளித்தலை இராஜேந்திரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் அரசு மணல் குவாரி அமைக்கபடும் என அறிவிக்கபட்டது. ஆனால் இதற்கான பணிகள் இன்னும் கரூர் மாவட்டத்தில் தொடங்கப்படாமல் மெத்தனமாக அலுவலர்கள் இருந்துள்ளனர்.
முறையீடு போராட்டத்தில் மக்கள்
இதனால், சிஐடியூ மணல் மாட்டுவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு மற்றும் முறையீடு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு கனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் பிச்சைமுத்து நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு அனுமதி கிடைத்தவுடன் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.
அமராவதி ஆற்றங்கரை ஓரம் மணல் குவாரி?
இதுகுறித்து சிஐடியூ கரூர் மாவட்ட மாட்டு உரிமையாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் உள்ளூர் கட்டட தேவைகளைப் பூர்த்தி செய்ய 14 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களின் அடிப்படையில் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி மாதம் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், கொத்தகுடியிர் அரசு மணல் குவாரி அமைக்க ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், கரூர் மாவட்டத்தில் இதுவரை எவ்விதமான பணிகளையும் அலுவலர்கள் தொடங்காததால் இன்று இப்போராட்டம் நடைபெற்றது. விரைந்து நடவடிக்கை எடுத்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாட்டுவண்டி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
மேலும் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது போல அமராவதி ஆற்றங்கரை ஓரம் அரசு மணல் குவாரி அமைப்பதற்கு வழிவகை செய்தால் ஒட்டுமொத்த மாட்டுவண்டி மணல் விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 60 ஆண்டுகள் பழமைமிக்க பாலம் இடிந்து விழுந்தது!