கரூர்: புகலூர் தாலுகாவுக்கு உட்பட்ட க.பரமத்தி அருகே உள்ள தென்னிலை மீனாட்சிவலசு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி. விவசாயியான இவர், விளைநிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 12) மாலை 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த கலையரசியை, க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வினோதினி ஆம்புலன்ஸில் ஏற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார்.
பின்னர், அங்கு கலையரசியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் ரத்த கொதிப்பு அளவு அதிகமாக உள்ளதாக தெரிவித்து உள்ளனர். ஆனால், கலையரசி மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து கலையரசி அளித்த பேட்டியில், “காவல் துறையினர் என்னை கட்டாயப்படுத்தி 108 ஆம்புலன்ஸில் ஏற்றி வந்தனர். அப்போது காவல் துறையினர் என்னை தகாத வார்த்தைகளால் பேசினர். தற்போது மருத்துவர்கள் எனது உடல் நிலை நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளனர். ஆனால், என்னை அழைத்து வந்த காவல் துறையினர் என்னை அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர். எனவே, இதனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் கலையரசியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, தனியாக கார் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்த காவல் துறையினர், உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த கலையரசியை பெண் காவலரின் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மணி நேரமாக ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது. மேலும், கடந்த மாதம் இதே கோரிக்கையை வலியுறுத்தி ராஜா என்ற விவசாயி, அப்பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்.
அப்போதும் காவல் துறையினர் ராஜாவை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்த்தனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ராஜா, தனது போராட்டத்தை கைவிட்டார். இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கலையரசி, 4வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில், காவல் துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்தனர் என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விவசாயி கலையரசி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு உயர்மின் கோபுரங்களை விளைநிலங்களில் அமைக்கப்படுவதற்கு மாற்று தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ஈசன் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, விவசாயிகளுக்கு எதிரான போராட்டங்களை கொடுக்க முயற்சி மேற்கொள்கிறது. மேலும், காவல் துறை, வருவாய்த்துறை மனித உரிமை மீறலில் செயல்பட்டு, விவசாயி கலையரசியை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்து வந்தபோது தரக்குறைவாக நடத்தப்பட்டுள்ளார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனித உரிமை மீறல் வழக்கு தொடர உள்ளோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழுப்புரத்தை தொடர்ந்து கரூரிலும் தீண்டாமை கொடுமை சர்ச்சை.. தமிழக அரசுக்கு தலித் அமைப்பு வைக்கும் கோரிக்கை!