கரூர் மாவட்டத்தில், இன்று (ஜூன்.13) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
குறிப்பாக, மாணவிகளுக்குத் தேவையான கழிவறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், கணினி வசதியுடன் கூடிய வகுப்பறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நூலகங்களில் புத்தகங்களின் இருப்பு, அதை பொது மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு நவீன வசதிகளை வழங்கி, எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வி கட்டணம்
கல்வி கட்டணம் வசூலிப்பதில், தனியார் பள்ளிகள் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என, தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்குத் தொடுத்தனர்.
இதுசம்பந்தமாக நீதிமன்றம், 75 சதவீத கட்டணம் மட்டுமே பெற்றோரிடமிருந்து வசூலித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
அதுவும் தவணை அடிப்படையில், 30 மற்றும் 45 சதவீதம் என, கட்டணத்தைத் தனியார் பள்ளிகள் வசூலிக்க அறிவுரை வழங்கியுள்ளது.
இதுசம்பந்தமாக அதிகப் புகார்கள் பெறப்பட்டு உள்ளதால், நீதிமன்ற நடைமுறையைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் வழக்கு
தொடர்ந்து அமைச்சரிடம், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரத்தில், தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக ஆட்சியைக் கவிழ்ப்போம் எனக் கூறியிருந்தார் என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டு, உண்மைத்தன்மை இருந்ததால் அதுகுறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்குப் பரிந்துரை செய்தனர்.
அதனடிப்படையில், தற்போது வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சரின் வசமுள்ள காவல்துறை கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் தேர்வு
உயர்கல்வி மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் கோரியுள்ளது.
இதுகுறித்த அறிக்கை பெறப்பட்டவுடன் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரை ஆலோசித்து முடிவெடுக்கப்படும்
மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.
கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் தவணை தடுப்பூசியை, அதிகளவில் ஆசிரியர்கள் செலுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல, கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார் அமைச்சர்.
இதையும் படிங்க:கரூர் அருகே வயிறு வலியால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்