கரூர்: வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
கரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளான குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதுகாப்பு அறைக்கு பின்புறம் கண்காணிப்புப் படக்கருவிகள் பொருத்தப்படாமல் உள்ளன.
எனவே இங்கு பாதுகாப்பு குறைபாடுள்ளதால், அந்நியர்களின் நுழைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. மேலும், அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், துணை ராணுவ படையினர் நாளொன்றுக்கு மூன்று கட்டமாக சுழற்சி அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.