கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 16, 18, 38 ஆகிய பகுதிகளுக்கு மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் இன்று (ஜன.2) நடைபெற்றது. இந்த முகாமினை காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, திமுக 18வது வார்டு கிளைச் செயலாளர் லோகநாதன் என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக, தங்கள் பகுதிக்கு எம்.பி வருகை தந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்கவில்லை என்றும் எம்.பி பதவியில் வெற்றி பெறுவதற்கு வாக்கு சேகரித்து வழங்கியதால் ராமானூர், ராஜா நகர் மக்கள் அவரிடம் கேள்வி கேட்பதாகவும் கரூர் எம்.பி ஜோதிமணியிடம் முறையிட்டார்.
திமுக நிர்வாகிகள் ஜோதிமணி எம்.பி-யிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் எம்பி ஜோதிமணி, "கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பகுதிகளில் 50 ஆண்டு காலமாகத் தார்ச் சாலை கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஆனால், தமிழ்நாடு அமைச்சர் முயற்சியால் சனப்பிரட்டி ஊராட்சியாக இருந்து இணைக்கப்பட்ட ராமானுர் பகுதியில் கழிவுநீர் வடிகாலும், தார் சாலைகள் அமைப்பதற்கும் மற்றும் சீரான குடிநீர் வழங்குவதற்காகக் குடிநீர் திட்டங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது தார்ச் சாலைகள், அமைக்கப்படுவதற்கு முன்பு குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக, ரூபாய் 112.3 மதிப்பீட்டில் அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இது தவிர்த்து வடிகால் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிர்மலா சீதாராமனை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஐஆர்எஸ் அதிகாரி!