கரூர் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கடந்த இரண்டு நாள்களாக சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் அறிவுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்.11) கரூர் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்த காவல் துறையினர் பேருந்துக்குள் அமர்ந்திருந்த முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு ரூ 200 அபராதம் விதித்தனர். இதேபோல், கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கரூர் நகர போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல் துறையினர் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும், கரூர் நகராட்சி அலுவலர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் மற்றும் ஹோட்டல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே நேற்று மட்டும் கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 38 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் அதிகரித்து வந்த சூழ்நிலையில் தற்போது திடீரென 38 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளை மாவட்ட நிர்வாகம் தீவிர கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைபிடிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் நேற்று முதல் நடவடிக்கைகள் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதையும் படிங்க: துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - ரேலா மருத்துவமனை