கரூர்: அரவக்குறிச்சி அருகேயுள்ள பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெரு அருகில் பள்ளப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அக்டோபர் 19ஆம் தேதி இரவு முழுவதும் குடிநீர் குழாய் அமைக்கும்பணி நடைபெற்றது. இப்பணியில் ஒப்பந்தப் பணியாளர்களான சேந்தமங்கலம் கிராமம் செல்லிவலசு இபி காலனி காளிமுத்து மகன் வீரக்குமார் (32), ஜேசிபி இயந்திர ஓட்டுநர், திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அச்சனம்பட்டி காளிராஜ் மகன் அஜித்குமார் (25), ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தது.
அப்போது, அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து இணைப்பு எடுத்து இரவு நேரத்தில் மட்டும் பயன்படுத்த தற்காலிக மின்விளக்கு அமைத்துள்ளனர். நள்ளிரவு 12 மணியளவில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக் கொண்டிருக்கும் போது போதிய வெளிச்சம் இல்லாததால் ஜேசிபி ஆப்பரேட்டர் அஜித்குமார் என்பவர் மின்விளக்கை வேறு இடம் மாற்றுவதற்காக எடுத்த போது மின்சாரம் தாக்கி தடுமாறி குழியில் வேலை செய்து கொண்டிருந்த வீரக்குமார் மீது விழுந்துவிட்டார். இதில் இருவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் இறந்த எஸ்.ஐ உடலுக்கு சைலேந்திரபாபு நேரில் அஞ்சலி