கரூர்: அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை துறையினர் 2 நாட்களுக்கு முன் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை24) கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனை என்பது திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் முதல் நடவடிக்கை. எனது நிறுவனத்தில் கைப்பற்றியதாக கூறப்படும் பணத்திற்கு கணக்கு உள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறும்போது அதனை சமர்ப்பிப்பேன்".
உண்மை ஒருநாள் வெல்லும்
"லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். அமைச்சரான பிறகு எந்த புதிய தொழிலையும் தொடங்கவில்லை. கட்சியில் ஒன்றிய செயலாளராக இணைவதற்கு முன்பே தொழில் செய்து இருக்கிறேன். வங்கி லாக்கர்களில் எதுவும் இல்லை".
"தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகளையும், கட்சி நிர்வாகிகளையும் மிரட்டி திமுகவில் இணைக்கும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்".
அரசியல் காரணங்களுக்காக பணி மாற்றம்
"போக்குவரத்து கழகத்தில் உள்ள அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாற்றம் செய்துள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத் துறையினரை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளனர். இவை நாங்கள் எதிர்பார்த்ததுதான்".
"தடுப்பூசி மையங்களில் திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். முன்னதாக டோக்கன்கள் வழங்கி அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியை இவர்கள் வழங்குவதைப் போல அரசியல் செய்து வருகின்றனர்".
திமுக அரசின் அலட்சியம்
"நியாயவிலைக் கடைகளில் திமுக கொடியேற்றி நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கரோனா முதல் அலையை கட்டுப்படுத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரிதமாகச் செயல்பட்டார். ஆனால் இரண்டாவது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது"என்றார்.
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,’உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு கரூர் மாவட்ட அதிமுகவினர் தயாராக உள்ளனர் "என்றார்.
இதையும் படிங்க: வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக - அதிமுக குற்றச்சாட்டு