கரூர்: கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் திங்கட்கிழமை புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது: "கரூரில் நடைபெற்று முடிந்த மாவட்ட துணைத் தலைவர் மறைமுக தேர்தலில் திமுகவினர் திண்டுக்கல் அருகே என்னோடு வந்த மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திரு.வி.க என்பவரை கார் கண்ணாடியை உடைத்து கடத்தி சென்றனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுகவினர் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களை உள்ளே செல்ல விடாமல் தகராறில் ஈடுபட்டினர்.
இது தொடர்பாக காவல்துறை நான் உட்பட 65 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் திமுகவைச் சேர்ந்த யார் மீதும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதனால் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படக் கூடாது என்பதற்காக முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர்.
கரூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தோடு, தொடர்ந்து அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. கரூரில் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது மட்டும் வழக்கு பதிந்த கரூர் மாவட்ட காவல்துறையினர், திமுகவினர் மீது ஏன் வழக்குப் பதியவில்லை.
மேலும், நேற்று நள்ளிரவில் அதிமுக நிர்வாகி அழகர்சாமி மகன் வீட்டில் இருந்தபடி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கில் சம்பந்தமில்லாத அவரை கைது செய்த போலீசார் எந்த காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்? யார் என்பது குறித்தும்? கைது செய்யப்பட்ட நபர் இதுவரை எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுகுறித்து வெளி மாநில தனிப்படை போலிசார் கைது செய்தாக கூறுகின்றனர்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான திரு.வி.கவை கடத்திய நபர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்திற்காக முதல் தகவல் அறிக்கை மட்டும் பதியப்பட்டுள்ளது கடத்தியவர்கள் குறித்து புகைப்படங்கள் காவல்துறையிடம் வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது. காவல்துறை திமுகவினருக்கு அடியாட்கள் போல செயல்படுகிறது. தொடர்ந்து இது போன்ற கீழ்தரமான செயல்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் போதைப்பொருள் விற்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் அனைத்து சட்டவிரோத செயல்களும் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் காவல்துறை அனுமதி தர மறுக்கிறது. கரூர் மாநகராட்சி ஆணையர் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களை தனியாக அறிவிப்பு செய்து மாற்றி வருகிறார். இதனை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வோம்." இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
இதையும் படிங்க: 'தம்பி மல! பில்லு இன்னும் வரல..?' கரூரில் அண்ணாமலையை கலாய்த்து போஸ்டர்!