கரூர் மாவட்டம், அருகேயுள்ள ஆத்தூர் அடுத்த செல்லரபாளையம் காலனியில் வசித்து வருபவர் பொன்னுசாமி (42). இவரது மனைவி பாப்பாத்தி(38). இவர்களுக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியில் சொந்தமாக வீடுகட்டி வசித்த இத்தம்பதி, அப்பகுதியில் வட்டி தொழில் செய்து வரும் திமுக பிரமுகர் மாயவன் என்பவரிடம் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பெற்ற கடனுக்காக சமத்துவபுரத்தில் இருந்த வீட்டை மாயவன் எழுதி வாங்கிக் கொண்டதாகவும், அது தவிர கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 லட்ச ரூபாய் கடன் தொகையை செலுத்தியும் மீதம் 8 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என தொந்தரவு செய்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், நேற்று(பிப்.18) கரூர் - மதுரை சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் பணி செய்யும் பாப்பாத்தியை, பணியிடத்தில் வைத்து மாயவனும் அவரது மனைவியும் கடனுக்கான வட்டியைக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சக பணியாளர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத பாப்பாத்தி மனமுடைந்து இன்று(பிப்.19) அதிகாலை 5 மணியளவில் தனது வீடு அருகேயுள்ள பழைய ஓட்டு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பாப்பாத்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட கணவன் பொன்னுசாமிக்கு வலிப்பு ஏற்பட்டு 108 வாகனம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த பாப்பாத்தியின் உறவினர்கள் கந்துவட்டி கும்பலை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கந்துவட்டி கொடுமை... பிள்ளைகளுடன் பெண் தற்கொலை முயற்சி - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!