ஊரடங்கையொட்டி கரூர் மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி முகக்கவசம் இன்றி வெளியே சுற்றியதாக 117 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.23,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்ததாக 12 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.6000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிகளை மீறி, இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்ததாக 98 வழக்குகள் பதிவுசெய்து, வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
மே 24 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை பதிவுசெய்யப்பட்ட வழக்குகள்
- முகக்கவசமின்றி வெளியே சுற்றியதாக ஒன்பதாயிரத்து 426 வழக்குகள் பதிவுசெய்து, 18 லட்சத்து 85 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்ததாக 776 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, மூன்று லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
- வாகனங்களில் வெளியே சுற்றியதாக இரண்டாயிரத்து 294 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 496 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தெரிவித்ததாவது, “கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அச்சமின்றி பொதுமக்கள் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: அதிகாலையில் அடுத்தடுத்து 3 மாநிலங்களில் நிலநடுக்கம்