குமரி மாவட்டம், குளச்சலை பூர்வீகமாகக் கொண்டவர் குளச்சல் மு. யூசுப். தற்போது நாகர்கோவிலில் வசித்துவரும் இவர், மலையாளத்தில் இருந்து பல படைப்புகளையும் தமிழக்கு மொழி பெயர்த்துள்ளார். இவர் மலையாளத்தில் இந்துகோபன் என்பவர் எழுதிய நாவலை "திருடன் மணியன்பிள்ளை" என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்.
இந்த நாவல், 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு பிரிவுக்கான (தமிழ்) சாகித்ய அகாதெமி விருதை குளச்சல் மு. யூசுப்புக்கு பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட விருதாளர்களுக்கு, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வைத்து விருது வழங்கும் விழா நடந்தது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்தும் விருது அறிவிக்கப்பட்டிருந்த படைப்பாளிகளுக்கு, சாகித்ய அகாதெமி தலைவர் விருதுகளை வழங்கினார். ஜூன் 14ஆம் தேதி நடந்த இவ்விழாவில் குளச்சல் மு. யூசுப்புக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட யூசுப், தனக்கு வழங்கப்பட்ட விருதில் தனக்குத் தெரியாத இந்தி எழுத்துகளை மாற்றி, தமிழில் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை சாகித்ய அகாதெமி அமைப்பினர் பரிசீலனை செய்வதாகக் கூறினர் என்று யூசுப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.