தமிழ்நாட்டில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி போன்ற பண்டிகைகளால் பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை இன்றுடன் நிறைவடைவதால், கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரியில் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பிக் காணப்படுகிறது.
ஆயுத பூஜை தினமான நேற்று வடமாநில, கேரளா சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று அதிகாலையில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்கமத்தில் ஒன்று கூடி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.
இதனால் கடற்கரைப்பகுதி, 16 கால் மண்டபம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்குப் படகில் செல்ல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாலை முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள், தங்கள் குடும்பத்துடன் சிறுவர், சிறுமியர்களுடன் கடற்கரையில் விளையாடி தங்கள் விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால், கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் இடமின்றி தவித்தனர். இன்று குமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை திருவிழா நடந்ததால் கன்னியாகுமரியில் பலத்த காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: ஆயுதபூஜை: வாழைத்தாரை நம்பி ஏமாற்றமடைந்த விவசாயிகள்...!
மேலும் பார்க்க: விஜயதசமி தினத்தில் மூடிக்கிடக்கும் அரசுப்பள்ளி - பெற்றோர்கள் ஏமாற்றம்