கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைதான் மாவட்டத்தில் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். சிறிய அறுவை சிகிச்சைகள் உள்பட அனைத்து விதமான நோய்களுக்கும் இங்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இருந்து இங்கு சிகிச்சைப் பெறுவதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
மேலும் இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக மருத்துவமனையின் தரம் மிகவும் குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக மருத்துவர்கள் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.
இச்சூழலில் குமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ஐந்தரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டி சாதனை படைத்தவர். சமீபத்தில் இவரது உடல்நிலை சரியில்லாமல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவரது உடலில் கை கால் பகுதிகளில் வீக்கம் ஏற்பட்டது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். எந்தவித மருந்து மாத்திரைகளும் கொடுக்காமல் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். நான்கு நாள்களுக்குப் பின்னர் அவரிடம் வந்த மருத்துவர் ஒருவர் உங்களுக்கு எந்த நோயும் இல்லை நீங்கள் கிளம்பலாம் என்று கூறி டிஸ்சார்ஜ் செய்துள்ளார்.
அதற்கு அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் எனக்கு கை கால் வீக்கம் அதிகமாக இருக்கிறது. உடல் வலியாக உள்ளது என்று அவரிடம் கூறியதற்கு, வேறு எங்காவது சென்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அரசு ஆம்புலன்ஸில் அரசுக்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்த எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று வேதனையுடன் கூறியபடி மருத்துவமனையிலிருந்து சென்றது பார்ப்பவர்களை வேதனை அடையச் செய்தது.
இதேபோல நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் பயிற்சியளிக்க, பயிற்சி மருத்துவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது குறைந்த அளவு மட்டுமே மயக்க மருந்து கொடுத்ததால் சுமார் இரண்டு மணி நேரத்தில் அவருக்கு உணர்வு வந்துவிட்டது.
இதனால் வலி தாங்காமல் அவர் அலறி துடித்துள்ளார். அப்போது அறுவை சிகிச்சையில் இறுதிக் கட்டத்தில் இருந்த பயிற்சி மருத்துவர் உணர்வுடனேயே வைத்து தையல் போட்டு உள்ளார். இது குறித்து மருத்துவரிடம் புகார் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. வலி தாங்கமுடியவில்லை ஊசி போடுங்கள் என்று கூறியும் வலிக்கு ஒரு முறைதான் மருந்து போடுவோம் திரும்பிப் போட முடியாது என்று கூறி மறுத்துள்ளனர்.
மேலும், மருத்துவர் நேரடியாக வந்து பார்க்காமல் பயிற்சி மருத்துவரை அனுப்பி நோயாளிகளை சோதனை செய்ய கூறுகிறார். இதனால் பாதிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு விட்டார்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பொறுப்பேற்ற பின்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த டீன் பெண் என்பதால் அவர் சொல்வதை மருத்துவர்கள் கேட்க மறுக்கிறார்களா அல்லது இவர் யாரையும் கண்காணிக்காமல் அவர்கள் போக்கில் விட்டுவிட்டு அவரது பணியை மட்டும் செய்கிறாரா என்று தெரியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து கூறுகையில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசரம் காரணமாக ஒருவர் சிகிச்சை பெற வந்தாலும் முதலில் அவருக்கு கரோனா சிகிச்சை எடுத்த பின்புதான் மேற்கொண்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதிலே அவருக்கு பாதி உயிர் போய்விடும்.
மேலும் எதற்கெடுத்தாலும் பயிற்சி மருத்துவரை வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். அறுவை சிகிச்சைகூட பயிற்சி மருத்துவரை வைத்து வழங்கப்படுகிறது. மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதுதான் அதற்காக ஒரு உயிரை பணயம் வைக்க முடியுமா. மருத்துவமனை மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இங்கு பெரும்பாலான மருத்துவர்கள் பணி புரிவதில்லை. இதனை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் கண்டு கொள்வதுமில்லை. மருத்துவமனை நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண ஏழை எளிய பொதுமக்களின் உயிர் பலியை தடுக்க முடியாது” என்றார்.