சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு தினம்தோறும் கன்னியாகுமரி-மும்பை ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை குமரி மாவட்ட ரயில் பயணிகள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ஏராளமான புகார்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பாக ரயில் பயணி ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டுள்ள கேள்விக்கு இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் அளித்துள்ள பதில் இதனை உறுதி செய்துள்ளது. அதன்படி, மோசமான உணவு விநியோகம் செய்யும் ரயில்கள் பட்டியலில், திருவனந்தபுரம்-புதுடெல்லி கேரளா எக்ஸ்பிரஸ் முதலிடத்திலும், எர்ணாகுளம்-நிஜாமுதீன் மங்களா எக்ஸ்பிரஸ் இரண்டாம் இடத்திலும், கன்னியாகுமரி-மும்பை ஜெயந்தி ஜனதா மூன்றாம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று கேட்டரிங் பணியை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மிக நீண்ட தூரம் செல்லும் ரயிலில் தரமற்ற உணவுகளை வழங்குவது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.