கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை ஏழு மணிமுதல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7:45 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பெண் வாக்காளர்களும் 203 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 2,243 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அரவிந்த், நாகர்கோவில் குருசடி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது வாக்கை பதிவு செய்தார். இதுபோல் மாவட்டம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். அவருடன் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் ஆகியோர் வாக்களித்தனர். வாக்களித்த பின்பு பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, " கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை ஏழு மணி முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குகள் அளித்து வருகின்றனர். இதனைக் காணும்போது தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. இதே ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்தால் இன்று மாலைக்குள் 75 சதவீதம் வாக்குகள் குமரி மாவட்டத்தில் பதிவாகும் என நம்புகிறேன்" என்றார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதியில்அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தோவாளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியிலும், நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி பழவிளை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.