கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தில் அருள்மிகு தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் முத்துக்குமார் என்பவர், தினமும் காலையில் கோயிலை திறந்து பூஜைகளை செய்துவிட்டு இரவில் கோயிலை பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.
வழக்கம்போல் நேற்று இரவும் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை பூசாரி கோயிலை திறக்க வந்தபோது, கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும், மற்றொரு உண்டியல் காணாமல் போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தலைவர் சுப்பையா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் உண்டியலை தேடி பார்த்தனர். அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகிலுள்ள தென்னந்தோப்புக்குள் உடைக்கப்பட்டு கிடந்தது.
மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் கோயிலின் முன்பக்க பூட்டை உடைத்து, உண்டியலை திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.