குமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் குலாலர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகள் அக்ஷயா (வயது 13) ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று (செப்.12) அக்ஷயா தனது வீட்டு மாடியில் தனது தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சேலை அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலே அக்ஷயா பரிதாபமாக உயிரிழந்தார். மகள் உயிரிழந்திருப்பதைப் பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அலறியதில், சத்தம் கேட்டு அவர்களது வீட்டிற்குச் சென்று பார்த்த அக்கம் பக்கத்தினர், அக்ஷயா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்தனர். தொடர்ந்து, சேலையில் கட்டப்பட்டிருந்த அவரது உடலை மீட்டு, கீழே இறக்கி, கோட்டார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அக்ஷயாவின் உடலை உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.
தாயாரின் சேலையில் தொட்டில் கட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வாத்து மேய்த்த விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!