கன்னியாகுமரி: குளச்சல் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தாம்சன் என்பவரை முறைகேடுகள் செய்து அதே திமுகவை சேர்ந்த நஸீர் என்பவர் வெற்றி பெற்று குளச்சல் நகர்மன்ற தலைவராகப் பதவி ஏற்றதாக கவுன்சிலர் சார்பில் குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று(அக்.26)குளச்சல் நகர்மன்ற அவசரக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதுமே கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு குளச்சல் நகர்மன்ற தலைவர் நஸீர் பதில் அளிக்க முடியாமல் கூட்டத்திலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து 13 திமுக கவுன்சிலர்கள் ஒரு சுயேச்சை கவுன்சிலர் உட்பட 14 கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் நகராட்சி ஆணையர் விஜயகுமாரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், வரலாற்று சிறப்பு வாய்ந்த ஏவிஎம் கால்வாயைத் தூர் வாருதல் எனக் கூறி பொது மக்களிடம் பணம் வசூல் செய்த தலைவர் நஸீர் அந்த கணக்கு யாரிடமும் தரவில்லை என்றும், எந்த தீர்மானங்களையும் கவுன்சிலர் கூட்டத்தில் அனுமதி பெறாமலேயே தன்னிச்சையாக அவர் செயல்பட்டு நிறைவேற்றி வருவதாகவும் குளச்சல் பகுதிகளில் உள்ள வார்டுகளில் வளர்ச்சி திட்டப் பணிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை அனைத்திலும் ஊழல் புரிந்து வருகிறார் எனக் கூறினர்.
இதனால் அவர் பதவி விலக வலியுறுத்தி தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோவையில் பாதுகாப்பை உறுதி செய்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு