கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே உள்ள நாக்கோடு பகுதியில் வேளாண்மைத் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் ரப்பர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் விவசாயிகள், வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, ரப்பர் உலர் கூடத்தில் ரப்பர் சீட்டுகள் உலர்த்தி கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், ரப்பர் சீட்டுகள் விவசாயிகளிடமிருந்தும் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு உலர வைப்பதற்காக கொண்டு வரப்படும் ரப்பர் சீட்டுகளை விவசாயிகள் இங்குள்ள கிடங்கில் இருப்பு வைப்பது வழக்கம். அதன்படி, உலர் கூடத்திலும், அங்குள்ள கிடங்கிலும் சுமார் 75 டன்களுக்கு மேல் ரப்பர் சீட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நேற்று(ஏப்.30) பிற்பகலில் திடீரென ரப்பர் உலர் கூடத்தில் தீப்பிடித்தது. கூடத்தில் உலர வைக்கப்பட்டிருந்த ரப்பர் சீட்டுகளில் தீ பரவி எரியத்தொடங்கியது. அப்போது, அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. தீயை அணைக்க முயன்றபோது, அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளி விக்ரமன் (60) திடீரென மயங்கி விழுந்தார். அவரை சகத் தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த முடியாததால், அருகில் உள்ள குழித்துறை மற்றும் தக்கலை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கிடங்கில் ரப்பர் இருந்த காரணத்தினால் தீ மேலும் எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.
பிறகு குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடி வீரர்கள் தீயை முழுமையாக அணைத்தனர்.
இந்த விபத்தில், உலர் கூடம் மற்றும் கிடங்கிலிருந்த 75 டன் ரப்பர் சீட்டுகளும் எரிந்து சாம்பலாகின. கட்டடமும், அங்கிருந்த இயந்திரங்களும் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து தகவலறிந்த குலசேகரம் வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் அனிதா, ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள், வேளாண்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். தீ விபத்து நடந்த உலர் கூடத்தின் அருகே உள்ள மற்றொரு கிடங்கில் சுமார் 50 டன்னுக்கும் மேல் ரப்பர் சீட்டுகள் இருந்துள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக அதில் தீ பரவவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு சிறிய தீயணைப்பு வாகனம் மட்டுமே உள்ளதால், அதை வைத்து தீயை விரைவாக அணைக்க முடியவில்லை என்றும், அதனால் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு பெரிய தீயணைப்பு வாகனம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.