சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால், கன்னியாகுமரி பகுதியில் ஆங்காங்கே பேரூராட்சி சார்பில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கன்னியாகுமரி கடற்கரை சாலையில் பகுதியில் அமைந்துள்ள கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட கழிப்பறையிலிருந்து கழிவுகள் கழிவு நீர் ஓடையாக காமராஜர் மணிமண்டபம் மற்றும் காந்தி நினைவு மண்டபத்தின் பின்புறம் வழியாக கொண்டு விடப்படுகிறது.
இவ்வாறு விடப்படுவதால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில்தான் திரிவேணி சங்கம கடல் பகுதியும் அமைந்துள்ளது. இந்த பகுதியை பக்தர்கள் புனிதமாக கருதி நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் பயன்படுத்துகின்றனர் .
இந்த அசுத்த நீர் இந்த பகுதியில் கலப்பதால் இந்த பகுதியில் விளையாடி நீராடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் வருகின்றன .மேலும் இந்த கழிவு நீர் கடலில் கலக்கும் இடத்தில்தான் சிறுவர் பூங்கா உள்ளது. இந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் இந்த பூங்காவிலும் சிறுவர்கள் விளையாடும் முடிவதில்லை.
காந்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்பவர்களுக்கும் காமராஜர் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து புத்தகம் வாசிக்கும் மக்களுக்கும் இந்த துர்நாற்றம் இடைஞ்சலாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இந்த கழிவறை செப்டிக் டேங்க்களில் சேகரித்து அதனை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.