கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே புத்தேரி அரசு உயர்நிலை பள்ளி பராமரிப்பு பணிகளுக்காக எம்எல்ஏ நிதியிலிருந்து 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் விரைந்து முடிக்காத காரணத்தால் மாணவ மாணவிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி அரசு பள்ளி நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளி பின்னாளில், அரசு பள்ளியாக மாறியது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் எதிர்ப்புறம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்எல்ஏ நிதியிலிருந்து பள்ளியை சீரமைக்க 40 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கானப் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் பிரச்சனைக்குரிய விஷயம் என்னவென்றால், பள்ளியின் முன்பக்க வாசல், புத்தேரி மெயின் ரோடு பகுதியில் இருக்கும் நிலையில், மற்றொரு வாசல் தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி புதிய கட்டடம் மற்றும் பழைய கட்டடம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மாணவர்கள் யார் வருகிறார்கள்? போகிறார்கள்? என்பது ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத அளவிற்கு மாறிவிடும் என ஊர்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளியில் ஒரு வாசலாக கூடுதல் கேட் பொருத்தப்பட்டதன் மூலம் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளதாகவும், கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், புத்தேரி அரசு பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருவதால் ஏற்கனவே, அங்கு உடைக்கப்பட்ட கான்கிரீட் தளங்கள் அப்படியே போடப்பட்டு உள்ளதால் மாணவ மாணவிகளின் கால்களை தினமும் அது பதம் பார்த்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீர் தொட்டி உடைக்கப்பட்டு அது சரி செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதுகுறித்து புத்தேரியை சேர்ந்த யூனியன் கவுன்சிலர் மாரிமுத்து என்பவர் கூறும்போது, 'நூறு ஆண்டுகளை நெருங்கிவரும் பழமை வாய்ந்த புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி ஆரம்ப காலத்தில் தனிப்பட்ட ஒரு சமுதாயத்தின் முயற்சியால் துவங்கப்பட்டு பின்னர், கிராம மக்களின் நிதியை திரட்டி அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர், இந்தப் பள்ளி அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்தப் பள்ளியில் புதிய கட்டடங்கள் கட்ட மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாஜக பிரமுகருமான எம்.ஆர்.காந்தி 40 லட்ச ரூபாயை, தொகுதி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து உள்ளார். அந்தப் பணத்தில் இந்த பணிகள் நடைபெற்று வந்த போதிலும் ஆளுங்கட்சியினர் தலையிட்டு தங்களது விருப்பம் போன்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலம், மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பள்ளியில் மாணவ மாணவிகள் மதிய உணவிற்குப் பின்னர் கைகழுவ வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் தொட்டி உடைக்கப்பட்டு அதற்கு பதிலாக, புதிய தொட்டி கட்டும் பணிகள் தாமதமாகி வருகிறது.
இதேபோன்று தாளங்கள் உடைக்கப்பட்டு கரடுமுரடாக கற்கள் குவிக்கப்பட்டு உள்ளதால் பள்ளிக்குள் மாணவ மாணவிகள் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் தலையிட்டு தேவையற்ற வாசல்களை மூடி பள்ளி இரண்டாக பிரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் எனவும், பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவ மாணவிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!