கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த 22 வயது (தற்போதைய வயது) இளைஞர் ஒருவர், 2020ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது சக மாணவி ஒருவரிடம் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன்பின் நண்பர் போல மாணவியிடம் பழகியுள்ளார். அதே ஆண்டில் அம்மாணவியை ஒரு நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்தது மட்டுமல்லாமல், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை காட்டி மிரட்டி தொடர்ந்து பலமுறை மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து கல்லூரி படிப்பு முடிந்த பின்பும், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி நடந்தவற்றை அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் சக மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே மாணவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை அறிந்த அவரது தந்தை, அவரை துபாய்க்கு அனுப்பி வைத்து தப்ப வைத்துள்ளார். அங்கு தப்பிச் சென்று தலைமறைவான இளைஞர், சொந்த ஊருக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் அழைத்து வரப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் வெளிநாடு தப்பிச்செல்ல துணை புரிந்ததாக அவரது தந்தை மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: செருப்புகளை திருடி சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் கைது